கோடையில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டால் பெங்களூருவில் 3 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வினியோகம்


கோடையில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டால் பெங்களூருவில் 3 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 3 March 2017 1:00 AM IST (Updated: 3 March 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 3 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று பெங்களூரு குடிநீர்-வடிகால் வாரிய தலைவர் துசார் கிரிநாத் கூறினார்.

பெங்களூரு,

கோடையில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டால் பெங்களூருவில் 3 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று பெங்களூரு குடிநீர்-வடிகால் வாரிய தலைவர் துசார் கிரிநாத் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

வரும் கோடையில் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி, வீட்டு வசதித்துறை மந்திரி கிருஷ்ணப்பா, விவசாயத்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, மேயர் பத்மாவதி, பெங்களூரு எம்.எல்.ஏ.க்கள் ஹாரீஷ், தினேஷ் குண்டுராவ், கோபாலய்யா, நாராயணசாமி, முனிராஜ், அரவிந்த் லிம்பாவளி, ஜமீர் அகமதுகான், சோமசேகர், முனிரத்னா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் துசார் கிரிநாத் குடிநீர் ஆதாரங்கள் குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது:-

6.32 டி.எம்.சி. தண்ணீர் தேவை

காவிரி ஆறு மூலம் பெங்களூரு நகருக்கு ஆண்டுக்கு 19 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தினமும் 1,400 மில்லியன் லிட்டர் தண்ணீர், நீரேற்றும் முறையில் காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் 1,350 மில்லியன் லிட்டர் குடிநீருக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 1-ந் தேதி முதல் வருகிற ஜூன் 30-ந் தேதி வரை பெங்களூருக்கு 6.32 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது.

காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள அணைகளில் தற்போது நீர் இருப்பு 21.441 டி.எம்.சி.யாக உள்ளது. இதில் 9.691 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்த முடியாது. எங்களிடம் 68 டேங்கர் லாரிகள் உள்ளன. இதன் மூலம் குடிநீர் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 100 வாடகை டேங்கர் லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆழ்குழாய் கிணறுகள்

குடிநீர் வினியோகம் செய்யும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரில் 7 ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இவற்றில் சுமார் 900 ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள் பழுதாகியுள்ளன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதியதாக ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ் குழாய் கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரில் புளோரைடு என்னும் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும். அந்த நச்சுத்தன்மையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய்களை தடுக்க தண்ணீரில் குளோரின் சேர்க்கப்படும். கோடையில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் பெங்களூருவில் 3 நாட்களுக்கு ஒரு முறை காவிரி நீர் வினியோகம் செய்யப்படும். கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு துசார் கிரிநாத் பேசினார்.

Next Story