புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 17 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்


புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 17 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 17 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வருகிற 8-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வுகள் காலை 9.15 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.

வினாத்தாள்களை காலை 9.15 மணிமுதல் 9.25 மணிவரை படிக்கவும், மாணவர்களின் விவரங்களை காலை 9.25 முதல் 9.30 வரை சரிபார்க்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் இந்த தேர்வுகள் 37 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன.

கைபேசிக்கு அனுமதி இல்லை

240 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 487 மாணவர்களும், 7 ஆயிரத்து 243 மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 1,472 பேர் எழுதுகிறார்கள். 814 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அறை கண்காணிப்பாளர்கள் கைபேசியை தேர்வறைகளில் முற்றிலும் பயன்படுத்தக்கூடாது. இப்பொதுத்தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க அனைத்து தேர்வு மையங்களிலும் நிலையான பறக்கும் படை செயல்பட உள்ளது. முதன்மை கல்வி அதிகாரியின் மேற்பார்வையில் 5 உறுப்பினர்களை கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு வளாகத்திற்குள் தேர்வர்கள் எந்த தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவருதல் கூடாது. அதனை மீறி எடுத்துவந்துவிட்டு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரையோ அல்லது தேர்வறை கண்காணிப்பாளர்களையோ பாதுகாப்பாக வைத்து இருந்து திருப்பி அளிக்குமாறு கோருதல் கூடாது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் 61 பள்ளிகளை சேர்ந்த 1,459 மாணவர்களும், 1,383 மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களாக 365 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகிறார்கள்.

161 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இப்பொதுத்தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க முதன்மை கல்வி அதிகாரியின் மேற்பார்வையில் 5 உறுப்பினர்களை கொண்டு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் 17 ஆயிரத்து 572 பேர் எழுதுகிறார்கள். 

Next Story