பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது 20 ஆயிரத்து 453 மாணவ, மாணவிகள் எழுதினர்


பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது 20 ஆயிரத்து 453 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2017 10:45 PM GMT (Updated: 2 March 2017 9:22 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 20 ஆயிரத்து 453 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 79 மேல்நிலைப்பள்ளிகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 76 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 155 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 275 மாணவர்களும், 6 ஆயிரத்து 276 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 551 மாணவ, மாணவிகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 192 மாணவர்களும், 4 ஆயிரத்து 869 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 61 மாணவ, மாணவிகள் என 2 கல்வி மாவட்டங்களையும் சேர்த்து 20 ஆயிரத்து 612 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத இருந்தனர்.

20,453 மாணவ, மாணவிகள்

நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பிரகதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்பட 34 தேர்வு மையங்களிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 30 தேர்வு மையங்களிலும் மாணவ, மாணவிகள் தமிழ் முதல் தாள் உள்ளிட்ட தேர்வை எழுதினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 453 மாணவ, மாணவிகள் நேற்று தேர்வு எழுதினார்கள்.

159 பேர் வரவில்லை

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 37 மாணவர்கள் உள்பட 67 மாணவ, மாணவிகளும், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தை சேர்ந்த 47 மாணவர்கள் உள்பட 92 மாணவ, மாணவிகளும் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 159 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் 2-ம் தாள் உள்ளிட்ட தேர்வு நடைபெற உள்ளது. 

Next Story