மீஞ்சூர் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


மீஞ்சூர் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 March 2017 11:00 PM GMT (Updated: 2 March 2017 9:24 PM GMT)

மீஞ்சூர் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு ராஜாஜி தெருவில் வசிப்பவர் ஜப்பார் (வயது 38). இவர் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றில் வெள்ளிப்பொருட்கள் உருக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் பில்சத் (35). இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 7 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஜப்பார் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். பில்சத் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது ஜப்பாரின் தம்பி அன்சார் மற்றும் தங்கை மகன் தலிம் அன்சாரி ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். தங்களது திருமணத்திற்கு கூட வராதவர்கள் வந்துள்ளதாக நினைத்த பில்சத், உணவு சமைப்பதற்காக கடைக்கு சென்று முட்டை வாங்கி வந்தார்.

கழுத்தை அறுத்து கொலை

சிறிது நேரம் கழித்து சமையல் கியாஸ் சிலிண்டர் எடுத்துக்கொண்டு ஊழியர் ஒருவர் பில்சத் வீட்டுக்கு வந்தார். அப்போது, பில்சத் ரத்த வெள்ளத்தில் தரையில் பிணமாக கிடந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லை. உடனே அந்த ஊழியர் இதுபற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, வருவாய் ஆய்வாளர் உமாசங்கரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, பில்சத் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

2 பேரை தேடுகிறார்கள்

பில்சத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பில்சத் வீட்டுக்கு நேற்று உறவினர்கள் 2 பேர் வந்த தகவல் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்து அன்சார் மற்றும் தலிம் அன்சாரி ஆகியோரை தேடி வருகின்றனர். 

Next Story