கீழ்வேளூர் பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு


கீழ்வேளூர் பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதியில் கச்சா எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிக்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மத்திய அரசு நிறுவனமான கெயில் மூலம் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் அனுப்பப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் அனுப்பப்படுவதால் சம்பந்தப்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்வேளூரை அடுத்த கர்ணாவெளி, வடக்குவெளி உள்ளிட்ட பகுதிகளில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் விவசாய நிலத்தில் பரவியதால், அந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்திநடராஜன் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு, உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதைதொடர்ந்து சேதமடைந்த எண்ணெய் குழாய்களை நீக்கிவிட்டு புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது.

எதிர்ப்பு

தற்போது மீண்டும் ஏற்கனவே அமைத்த குழாய்களில் சேதமடைந்துள்ளதால் புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனால் தற்போது வறட்சி மற்றும் தண்ணீர் இன்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மேலும், விவசாயிகளுக்கு இந்த குழாய் பதிக்கும் பணிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதால், இந்த குழாய் பதிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து அங்கு பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்திவரும் சூழ்நிலையில், தற்போது கீழ்வேளூர் பகுதியிலும் விவசாயிகள் எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கெயில் நிறுவனம் சார்பில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இந்த பணியால் விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்ததின்பேரில், தற்போது கீழ்வேளூர் பகுதியில் எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் மேற்கண்ட பணிகளை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

Next Story