தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம்


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 3 March 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

காத்திருக்கும் போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்

போராட்டத்தில், பெருங்குளம் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தில் விவசாய கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்து உள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், கூட்டுறவு நிர்வாகம் பழிவாங்கும் நோக்கத்தில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுகிறோம் என்று அறிவிப்பு வெளியிட்டதை கண்டிப்பது, நகைகள் ஏலம் விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

போலீசாருடன் வாக்குவாதம்

தொடர்ந்து விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்தனர். அப்போது தூத்துக்குடி புறநகர துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், காத்திருக்கும் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகையால் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தக்கூடாது, மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட கலெக்டர் ரவிகுமாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

போராட்டத்தில் சங்க மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் நம்பிராஜன், ஒன்றிய தலைவர் பொன்ராஜ், கிளைத்தலைவர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story