கடுமையான வறட்சியால் தீவனத்தட்டுப்பாடு: சந்தைக்கு அதிக அளவில் மாடுகளை விற்க வந்த விவசாயிகள்


கடுமையான வறட்சியால் தீவனத்தட்டுப்பாடு: சந்தைக்கு அதிக அளவில் மாடுகளை விற்க வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

கடுமையான வறட்சி காரணமாக தீவனத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் ஈரோடு சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.

ஈரோடு,


ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரத்திற்கான சந்தை நேற்று கூடியது. இதில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 600 பசு மாடுகள், 500 எருமை மாடுகள் என மொத்தம் 1,100 மாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் மாடுகளின் வரத்து அதிகமாக இருந்தது.

மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான மாடுகளை வாங்கி லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

வறட்சி


பசு மாடுகள் குறைந்தபட்சம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் குறைந்த பட்சம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும் விலைபோனது. முன்னதாக வளர்ப்பு கன்றுகள் விற்பனை நடந்தது. இதில் 300 கன்றுக்குட்டிகள் விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து சந்தையின் மேலாளர் முருகன் கூறும்போது, ‘‘வறட்சியால் மாடுகளுக்கு தீவனத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கால்நடைகள் குடிக்க தண்ணீர்கூட வழங்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை செய்து வருகிறார்கள். கடந்த வாரத்தைவிட இந்த வாரம் 100 மாடுகள் அதிகமாக கொண்டு வரப்பட்டு உள்ளது.’’, என்றார்.


Next Story