முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 5 லட்சம் பேருக்கு சிகிச்சை கலெக்டர் சிவஞானம் தகவல்
முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
விருதுநகர்,
காப்பீட்டு திட்டம்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ.1½ லட்சம் வரையிலும் அனுமதிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரையிலும் மருத்துவ செலவினை பெற இயலும். மேலும் மருத்துவ காப்பீடு திட்டத்தால் மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
இருதய அறுவை சிகிச்சை, புற்று நோய், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், கண் நோய் சிகிச்சை, காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கருப்பை நோய்கள் மற்றும் ரத்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாள் மற்றும் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக்கான கட்டணமும், இதர செலவினங்களுக்கான தொகையும் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அடையாள அட்டைவிருதுநகர் மாவட்டத்தில் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வழங்கும் நிரந்தர முகாம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் புதிதாக அடையாள அட்டை எடுப்பவரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
இதற்கான சான்றினை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற வேண்டும். அடையாள அட்டை எடுக்க வருபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற அசல் வருமான சான்று, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும். ஏற்கனவே பழைய மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள். அந்த அசல் காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டையினை காண்பித்து புதிய காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
அறுவை சிகிச்சைவிருதுநகர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் இருதய நோய் சிகிச்சை, தோல் நோய்க்கான சிகிச்சை காது மூக்கு தொண்டைக்கான சிகிச்சை, சிறுநீரகக்கல் நீக்கம் சிகிச்சை, நரம்பியல் குறித்த சிகிச்சை, கண் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, எலும்பியல் காய சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சைகள் 5 லட்சத்து 1 ஆயிரத்து 206 பேருக்கு ரூ.89 கோடியே 66 லட்சத்து 8 ஆயிரத்து 213 மதிப்பில் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.