லாரி டிரைவர் மீது தாக்குதல்: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


லாரி டிரைவர் மீது தாக்குதல்: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 March 2017 10:45 PM GMT (Updated: 3 March 2017 1:37 PM GMT)

லாரி டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அலுவலகத்தை லாரி டிரைவர்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரி,

சுங்கச்சாவடி

கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சுங்கச்சாவடி உள்ளது. கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு வாகனங்களில் செல்லும் மக்கள் இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த சுங்கச்சாவடியை போலுப்பள்ளி அருகில் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர், அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் ஓசூரில் இருந்து சென்னை நோக்கி பாரம் ஏற்றிச் கொண்டு சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்றது. அந்த லாரியை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தவணி கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார்.

டிரைவர் மீது தாக்குதல்

அந்த லாரி நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வந்தது. அப்போது லாரியில் ஒரு டன் கூடுதலாக பாரம் உள்ளது எனவே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது. அப்போது முருகன் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இது தொடர்பாக முருகனுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முருகனை 7 பேர் கொண்ட கும்பல் தாக்கினார்கள்.

இதில் காயம் அடைந்த முருகனை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட லாரி டிரைவர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் சுங்கச்சாவடி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து லாரி டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக லாரி டிரைவர்கள் கூறியதாவது:–

நடவடிக்கை எடுக்க வேண்டும்

லாரி டிரைவர் முருகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு 40 சதவீதம் சுங்கச்சாவடியில் விலக்கு அளிக்க வேண்டும். அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களில் பாரங்களை இறங்கி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கே சுங்கச்சாவடி ஊழியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


Next Story