அய்யம்பேட்டை அருகே தீ விபத்து: ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து சேதம்
அய்யம்பேட்டை அருகே தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து சேதமடைந்தன.
அய்யம்பேட்டை,
தீ விபத்தில் கரும்புகள் எரிந்தனஅரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே நாயக்கர்பாளையம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராமகிருஷ்ணன் (வயது 36). இவர் அய்யம்பேட்டை அருகே சோமேஸ்வரபுரம் கிராமத்தில் உள்ள தனது வயலில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். இந்த கரும்புகளை சாத்தமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொடுப்பதற்கு பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கரும்பு வயலுக்கு அருகில் மின்மாற்றியில் இருந்து தீப்பொறிகள் பறந்து கரும்பு வயலில் விழுந்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த பாபநாசம், திருவையாறு ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 5 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.