குடியாத்தம் அருகே பையில் கிடந்த பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை


குடியாத்தம் அருகே பையில் கிடந்த பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை
x
தினத்தந்தி 4 March 2017 2:45 AM IST (Updated: 3 March 2017 8:05 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் கிராமம் அருகே ஜெய்நகரில் உள்ள காலி வீட்டுமனைகள் பகுதியில் சிலர் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர்.

குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த நத்தம் கிராமம் அருகே ஜெய்நகரில் உள்ள காலி வீட்டுமனைகள் பகுதியில் நேற்று மதியம் சிலர் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்–இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது பிறந்த 2 நாட்களே ஆன பெண் குழந்தை பையில் இருந்துள்ளது. இதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ அலுவலர் அமுதாமணி, மருத்துவர் மாலதி ஆகியோர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘குழந்தை பிறந்து 2 நாட்கள் இருக்கும். அந்த குழந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்லது அரசு மருத்துவமனையில் பிறந்திருக்க வேண்டும். தொப்புள் கொடியில் கிளிப் உள்ளது. மேலும் குழந்தை சுமார் 1 கிலோ 600 கிராம் எடையில் இருந்தாலும் ஆரோக்கியமாக உள்ளது. காலையில் இருந்து பையில் கிடந்ததால் பனியாலும், வெயிலாலும் குழந்தை சற்று சோர்வாக உள்ளது. குழந்தை தொடர்ந்து மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்படும்’ என்றனர்.



Next Story