ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதாக புகார்


ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதாக புகார்
x
தினத்தந்தி 3 March 2017 9:15 PM GMT (Updated: 3 March 2017 2:46 PM GMT)

கண்ணமங்கலத்தில் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதாக புகார் தெரிவித்ததை தொடர்ந்து தாசில்தார் நேரில் ஆய்வு செய்தார்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தில் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதாக புகார் தெரிவித்ததை தொடர்ந்து தாசில்தார் நேரில் ஆய்வு செய்தார்.

ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் புதிய கட்டிடம்

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திருமண மண்டபங்கள், வணிக வளாகம் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காணப்படும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என ஏரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில் கட்டிடங்களை அகற்ற கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கட்டிட உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பை இன்னும் அமல்படுத்தவில்லை.

தற்போது ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சொந்த இடமுள்ள சீனிவாசப்பெருமாள் என்பவர் கடந்த சில நாட்களாக அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி வருகிறார். இக்கட்டிடம் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளதாக நுகர்வோர் சங்க தலைவர் சாமிநாதன், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் புகார் தெரிவித்துள்ளார்.

தாசில்தார் ஆய்வு

இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, நேற்று ஆரணி தாசில்தார் தமிழ்மணி, பொதுப்பணித்துறை பொறியாளர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் திருவேங்கடம், உதவி நில அளவையர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

சம்பந்தப்பட்ட இடம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளதா? என பதிவேட்டில் ஆய்வு செய்த பின்னரே தெரியவரும். அதுவரை கட்டிட பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு இட உரிமையாளர் சீனிவாசபெருமாளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.



Next Story