பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு


பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு
x
தினத்தந்தி 4 March 2017 3:45 AM IST (Updated: 3 March 2017 9:48 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவு அடைந்து உள்ளது.

பரமத்திவேலூர்,

மரவள்ளிக்கிழங்கு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பரமத்தி, கபிலர்மலை, அண்ணாநகர், வாழவந்தி, பெருங்குறிச்சி, சோழசிராமணி, திடுமல், பாகம்பாளையம், சின்னமருதூர், கூடச்சேரி, காசப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துள்ளனர்.

இந்த பகுதியில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, செல்லப்பம்பட்டி, ஆத்தூர், மலைவேப்பங்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிப்ஸ் தயார் செய்பவர்களுக்கும், சேகோ தொழில் சாலைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

விலை சரிவு

மேலும் மரவள்ளிக்கிழங்கு அதில் உள்ள ஸ்டார்ச் மற்றும் பாயிண்ட் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பரமத்தி வேலூர் பகுதியில் 1 டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.13,000 வரை விற்பனையானது. இந்த நிலையில் நேற்று பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவு அடைந்து உள்ளதாக மரவள்ளி பயிரிட்டு இருக்கும் விவசாயிகள் தெரிவித்தனர்.

பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு சிப்ஸ் தயாரிப்பதற்காக அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல கேரள வியாபாரிகளும் பரமத்தி வேலூர் பகுதிக்கு வந்து மரவள்ளிக்கிழங்கை வாங்கிச்செல்வார்கள். இந்த நிலையில் கேரள வியாபாரிகள் தற்போது பரமத்தி வேலூர் பகுதிக்கு மரவள்ளிக்கிழங்கு வாங்க வருவதில்லை. அதேபோல இங்கிருந்து மரவள்ளிக்கிழங்குகளும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை. தற்போது பொள்ளாச்சி பகுதியில் இருந்து கேரளாவுக்கு மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்குகள் தேக்கம் அடைந்து உள்ளதால் அதன் விலை சரிவடைந்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story