ராமேசுவரம் ரத வீதிகளில் வாகனங்களை அனுமதிக்கக் கோரிய வழக்கு: ராமநாதபுரம் கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு
மதுரை,
சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிமாநிலங்களை சேர்ந்த முதியவர்கள் பலரும் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலின் மேற்கு ரதவீதிக்கு பின் பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
அதோடு வடக்கு, கிழக்கு, தெற்கு ரத வீதிகளில் பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களில் செல்ல முடிவதில்லை. இதனால் வயதான பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே வயதான பக்தர்களின் நலன் கருதி நான்கு ரத வீதிகளிலும் வாகனங்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தரப்பில், ‘கோவிலின் பாதுகாப்பு கருதியும், ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரிலும் தான் ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மனுதாரர் வக்கீல், ‘‘ரத வீதிகளில் வயதான பக்தர்கள் வாகனங்களில் செல்ல கோர்ட்டு தடை விதிக்கவில்லை’’ என்றார்.
பின்னர் இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.