பழிவாங்கும் நோக்கத்தில் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஐகோர்ட்டு நூதன தண்டனை
பழிவாங்கும் நோக்கத்தில் ஆசிரியர்களை பணியிட மாற்றம்
மதுரை,
ஆசிரியர்கள் பணியிட மாற்றம்ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள எஸ்.எஸ்.ஏ.எம். அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக பி.முகேந்திரன், சண்முகநாதன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது பாலியல் புகார் வந்ததன்பேரில், அவர்களை பணியிட மாற்றம் செய்து மேல்நிலைக்கல்வி இணைஇயக்குனர் உத்தரவிட்டார்.
இதனால் அவர்களை அந்த பள்ளியில் இருந்து விடுவித்து பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா சான்றிதழ் வழங்கினார். ஆனால் இந்த நடவடிக்கை பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘பணியிட மாற்றம் செய்ய எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. எனவே அதுதொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.
புகார் செய்ய கட்டாயப்படுத்தினார்இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தன் 2 மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் போலி சாதிச் சான்றிதழ் வாங்கிய சம்பவம் மனுதாரர்களுக்கு தெரியவந்துள்ளது. இதன்காரணமாக அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில், பழைய மாணவி ஒருவரை இவர்கள் மீது பாலியல் புகார் செய்ய வற்புறுத்தி உள்ளார். இல்லையென்றால் அங்கு படிக்கும் அவருடைய தங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்று மிரட்டி உள்ளார்.
அந்த பெண்ணிடம் விசாரித்ததில் இந்த தகவலை கோர்ட்டில் தெரிவித்துள்ளார். மேலும் மனுதாரர்களான ஆசிரியர்கள் நல்லமுறையில் பழகக்கூடியவர்கள் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். மனுதாரர்களை பணியிட மாற்றம் செய்ததை எதிர்த்து அந்த பள்ளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். மனுதாரர்கள் பள்ளி மாணவர்களிடையே நல்ல பெயர் வாங்கி வந்ததாலும், தலைமை ஆசிரியைக்கு எதிராக இருந்ததாலும் அவர் தவறான நோக்கத்துடன் மனுதாரர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவுசிற்பிகளிடம் கல்லையோ, மரத்தையோ கொடுத்தால் அழகான சிற்பமாக செதுக்கிவிடுவார்கள். அதுபோல மாணவர்களின் கனவை செதுக்கி, சமுதாயத்தில் அவர்களை ஜொலிக்கச் செய்வது ஆசிரியர்கள் தான். இந்த பள்ளி தலைமை ஆசிரியை போன்ற ஒழுக்க நெறியற்றவர்களால் ஆசிரியர்களின் நன்மதிப்பு கெடுகிறது. இதனால் மனுதாரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று இந்த கோர்ட்டு முடிவு செய்கிறது. எனவே மனுதாரர்களை பணியிட மாறுதல் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அமைதியை குலைத்ததற்காக தலைமை ஆசிரியை பிரேமாவுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்கிறோம்.
எனவே திருப்புல்லாணியில் 2,400 சதுர அடி பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அவரது சொந்த பணத்தில் 2 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். இதை மாவட்ட முதன்மை நீதிபதி மேற்பார்வையிட்டு ஐகோர்ட்டு பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியை பிரேமாவை பணியிட மாற்றம் செய்யலாம். இந்த உத்தரவை நிறைவேற்றாதபட்சத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றியதற்கான செலவுத்தொகையை அவருடைய சம்பளத்தில் பிடித்தம் செய்யலாம். அவ்வாறு செய்யவில்லையென்றால் மேல்நிலைப்பள்ளிக்கல்வி இணைஇயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.