100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கிராமமக்கள் கோரிக்கை மனு
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவாரூர்,
கோரிக்கை மனுதிருவாரூர் கீழக்காவாதுகுடி ஊராட்சி பிலாவடிமூலை கிராம மக்கள் நேற்று திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
கீழக்காவாதுகுடி ஊராட்சியை சேர்ந்த பிலாவடிமூலை கிராம மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் செய்வதற்காக சேந்தமங்கலத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் செல்வற்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தில் போதிய பணிகள் எதுவும் செய்யவில்லை. இதன் காரணமாக வருமான இழப்பு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிலாவடிமூலையில் பாசன வாய்க்கால், வடிகால்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீர் பாசனம் தடைபட்டு வருகிறது. கால்நடைகளும் தண்ணீர் இன்றி பாதிக்கப்படுகின்றன. எனவே பிலாவடிமூலையில் பாசன வாய்க்கால், வடிகால் ஆகிய நீர்நிலைகளை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தூர்வாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். முன்னதாக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கிட கோரி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.