சம்பளம் வழங்காததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
வி.கைகாட்டி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி,
வி.கைகாட்டி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ஆரனூர் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஒரு மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம், தொழிலாளர்கள் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் பயன் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிதம்பரம்– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்புஇது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கீழப்பழூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கபிலன் ஆகியோர் தொழிலாளர்களிடம் 100 நாள் வேலை திட்டத்தில் விரைந்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.