ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்தது சென்னை ஐ.டி. நிறுவன ஊழியர்கள் படுகாயம்


ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்தது சென்னை ஐ.டி. நிறுவன ஊழியர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 4 March 2017 3:15 AM IST (Updated: 3 March 2017 11:32 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சென்னை ஐ.டி. நிறுவன ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

சென்னையை சேர்ந்த தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் ஒரு வேனில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இந்த வேனை சென்னையை சேர்ந்த பாட்ஷா (வயது 32) என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலைக்கு நேற்று காலை சென்று கொண்டு இருந்தனர்.

கல்லட்டி மலைப்பாதையில் 7–வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பீதியடைந்து அலறினார்கள். திடீரென்று அந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.

8 பேர் படுகாயம்

வேனுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்த ஊழியர்கள் வேதனையால் அலறி துடித்தார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து அவர்களை மீட்டனர். இந்த விபத்தில் ராகேஷ் (24), ஸ்ரீதர் (25), கமலக்கண்ணன் (26), யாமினி (24), வினோத்குமார் (26), ரவீந்தரன் (29), சசிகாந்த் (28), டிரைவர் பாட்ஷா ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஊட்டி புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–

கவனக்குறைவு

ஊட்டியிலிருந்து முதுமலை செல்லும் கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட செங்குத்தாக இறங்கும் மலைப்பாதை ஆகும். இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் இரண்டாவது கியரிலேயே இயக்கப்பட வேண்டும் என்பது போக்குவரத்து விதி ஆகும். இது குறித்து சாலையில் பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் மலைப்பாதையில் வாகங்களை இயக்கி அனுபவம் உள்ளவர்களே இதுபோன்ற சாலைகளில் எளிதாக வாகனங்களை இயக்க இயலும். சற்று கவனக்குறைவாக செயல்பட்டாலும் வாகனம் விபத்தில் சிக்குவது உறுதி.

சென்னையிலிருந்து வந்து விபத்தில் சிக்கிய வேனை டிரைவர் மிகவும் கவனக்குறைவாக, வேகமாக ஓட்டி உள்ளார். இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக மலை சரிவில் உருளாமல் சாலையில் கவிழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுற்றுலா வரும் வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதையில் செல்லும்போது அனுபவம் உள்ள டிரைவருடன் செல்வது நல்லது. அது போல போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதும் முக்கியம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story