திசையன்விளை அருகே கிணற்றில் தள்ளி மகளை கொன்றது குறித்து பெண் எழுதிய டைரி போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை


திசையன்விளை அருகே கிணற்றில் தள்ளி மகளை கொன்றது  குறித்து பெண் எழுதிய டைரி போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை
x
தினத்தந்தி 3 March 2017 9:30 PM GMT (Updated: 3 March 2017 6:05 PM GMT)

கிணற்றில் தள்ளி மகளை கொன்றது குறித்து தலைமறைவாக இருந்துவரும் பெண் எழுதிய டைரியை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

தட்டார்மடம்,

கிணற்றில் தள்ளி மகளை கொன்றது குறித்து தலைமறைவாக இருந்துவரும் பெண் எழுதிய டைரியை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி அந்த பெண்ணை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மகளை கொன்ற பெண்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே கரிசல் என்ற கிராமம் உள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சற்று தொலைவில் உள்ள அந்த ஊரைச் சேர்ந்தவர், கோவிந்தராஜ். இவர் மும்பையில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி பாமா என்ற பால வைதேகி (வயது 35). இவர்களுடைய சுஜிதா (13), மகன் சிவனேஷ் (11).

சுஜிதா 7–ம் வகுப்பு மாணவி. சிவனேஷ் 5–ம் வகுப்பு படித்து வருகிறார். பால வைதேகிக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து தந்தையிடம் கூறப்போவதாக மகள் சுஜிதா கூறி வந்தாளாம்.

போலீசார் வலைவீச்சு

இதனால் மகள் மீது ஆத்திரம் அடைந்த பால வைதேகி நேற்று முன்தினம் தன்னுடைய மகளை அங்குள்ள ஒரு கிணற்றில் தள்ளிக் கொன்றார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் சிவனேஷ் அலறியதால், அவனையும் கிணற்றில் தள்ளி விட்டு தலைமறைவானார்.

கிணற்றில் உள்ள இரும்பு குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிய சிவனேசை, அந்த பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி, பால வைதேகி மீது மகளை கொன்றது தொடர்பாகவும், மகனை கொல்ல முயற்சித்தது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்து, அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மாமியார்– நாத்தனார் கைது

இதற்கிடையே பால வைதேகியின் தந்தை ரத்தினபாண்டி, தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், தன்னுடைய மகள் பால வைதேகிக்கு, அவருடைய கணவர் கோவிந்தராஜின் அக்காள் மகன் ஜெயராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்து ள்ளார். கோவிந்தராஜின் குடும்பத்தினர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றும் வகையில் பால வைதேகியை கொடுமைப்படுத்தினர். இதுகுறித்து என்னுடைய மகள் பால வைதேகி, என்னிடம் செல்போனில் தெரிவித்தாள். எனவே கோவிந்தராஜின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக தட்டார்மடம் போலீசார் நடவடிக்கை எடுத்து கோவிந்தராஜின் தாயார் லலிதா, தங்கை அனிதா, தம்பி ராமராஜ், கோவிந்தராஜின் அக்காள் மகன் ஜெயராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் லலிதா, அனிதா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

டைரி சிக்கியது

பாலவைதேகி தன்னுடைய குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்ட பின்னர் தனது வீட்டுக்கு சென்று உள்ளார். இதுகுறித்து டைரியில் எழுதி வைத்து விட்டு தலைமறைவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த டைரியை போலீசார் கைப்பற்றி இருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று சிறுமி சுஜிதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று மாலையில் மும்பையிலிருந்து அவளுடைய தந்தை கோவிந்தராஜ் ஊருக்கு திரும்பி வந்தார். மகளின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.


Next Story