தூத்துக்குடியில் மலிவு விலையில் குடிநீர் விற்பனை தொடக்கம் 20 லிட்டர் குடிநீர் ரூ.18–க்கு கிடைக்கிறது


தூத்துக்குடியில் மலிவு விலையில் குடிநீர் விற்பனை தொடக்கம் 20 லிட்டர் குடிநீர் ரூ.18–க்கு கிடைக்கிறது
x
தினத்தந்தி 3 March 2017 9:15 PM GMT (Updated: 3 March 2017 6:11 PM GMT)

தூத்துக்குடியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, பொதுமக்களுக்கு மலிவு விலையில் 20 லிட்டர் குடிநீர் ரூ.18–க்கு நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, பொதுமக்களுக்கு மலிவு விலையில் 20 லிட்டர் குடிநீர் ரூ.18–க்கு நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் விற்பனை...

வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், தூத்துக்குடி நகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பாட்டில்களில் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மாவட்டத்தில் 53 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்கள் உள்ளன. இதில் 8 நிறுவனங்கள் மட்டுமே அரசின் முறையான உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. 9 நிறுவனங்கள் அரசு உரிமம் பெறாமல் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்க கலெக்டர் ரவிகுமார் உத்தரவிட்டு உள்ளார். மற்ற குடிநீர் விற்பனை நிறுவனங்கள் அனைத்து சான்றிதழ்களையும் உடனடியாக பெறுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விலையை குறைக்க...

இந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குடிநீரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. 20 லிட்டர் குடிநீர் ரூ.30 முதல் 35 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து குடிநீர் விலையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் ரவிகுமார், குடிநீர் விற்பனை செய்யும் நிறுவன உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 20 லிட்டர் குடிநீரை ரூ.25–க்கு விற்பனை செய்ய அறிவுறுத்தினார். ஆனால் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் விலை குறைப்புக்கு முன்வரவில்லை.

மலிவு விலையில் குடிநீர்

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கம்சார்பில் பண்ணை பசுமை காய்கறி கடை, மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகம் அருகேயும் குடிநீர் விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டது. இங்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.18–க்கு விற்பனை செய்யப்பட்டது. மக்கள் நேற்று காலை முதல் ஆர்வமுடன் தண்ணீரை வாங்கி சென்றனர்.

காலி 20 லிட்டர் பாட்டிலை கொடுத்துவிட்டு ரூ.18–க்கு புதிய குடிநீர் பாட்டிலை வாங்கி சென்றனர். இந்த குடிநீர் விற்பனை தொடங்கப்பட்டதால், புதிய பஸ் நிலையம் சுற்று வட்டாரத்தில் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் விலையை குறைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் குடிநீர் விலை குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.


Next Story