தாத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும் கலெக்டர் தகவல்


தாத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும்  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 March 2017 2:45 AM IST (Updated: 4 March 2017 12:06 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருடைய வங்கி கணக்கில் ஒருவாரத்தில் அரசு உதவித்தொகை வரவு வைக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருடைய வங்கி கணக்கில் ஒருவாரத்தில் அரசு உதவித்தொகை வரவு வைக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வறட்சி மற்றும் குடிநீர் தேவை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு தொழில்முனைவோர் வளர்ச்சிக்கழக இயக்குனர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ரவிகுமார் முன்னிலை வகித்தார்.

வங்கி கணக்கில் வரவு

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் பேசும் போது, ‘மாவட்டத்தில் 1 லட்சத்து 78 ஆயிரம் எக்டேர் பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் கருகிவிட்டன. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உதவித்தொகை இன்னும் ஒருவார காலத்திற்குள், அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

குடிநீர் பிரச்சினை..

மாவட்டத்தில் 1,761 கிராம குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 325 கிராம குடியிருப்புகள் தவிர மற்ற அனைவருக்கும் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கபட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் 21 நாட்களுக்கு தண்ணீர் வழங்கி வந்த நிலையில், தற்பொழுது 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் கோவில்பட்டி நகராட்சியின் மூலம் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கி வந்த நிலையில், தற்பொழுது 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.

குடிநீர் மையத்தில் ஆய்வு

ஆய்வுக்கூட்டத்திற்கு முன்னதாக, புதூர் ஊராட்சி ஒன்றியம் அயன்கரிசல்குளம் கிராமத்தில் ரூ.4 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன், மாவட்ட கலெக்டர் ரவிகுமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும, கீழக்கரந்தை, ராகுராமபுரம், அயன்பொம்மையாபுரம், பிள்ளையார் நத்தம், சின்னமலைக்குன்று, கடலையூர், லிங்கம்பட்டி, குலசேகரபுரம், திட்டங்குளம், எத்திலப்பநாயக்கன்பட்டி, ஜெகவீரபாண்டியபுரம், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் பயிரிடப்பட்டுள்ள விவசாய பணிகள் குறித்தும், குடிநீர் வழங்கப்படுவது குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணிகளையும், சீவலப்பேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும், மாவட்டத்தில் வறட்சி காலங்களில் ஏற்படுகின்ற தட்டுப்பாட்டினை நீக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள குடிநீர் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வு கூட்டத்தில், பயிற்சி கலெக்டர் ராஜகோபால், திட்ட இயக்குனர் பிச்சை, கோவில்பட்டி உதவி கலெக்டர் கண்ணபிரான் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story