சசிகலா புஷ்பா எம்.பி. மீதான புகாரை வாபஸ் பெற மனு அளித்த பெண்ணுக்கு மிரட்டல் பாதுகாப்பு கேட்டு தூத்துக்குடி கோர்ட்டில் மனு
சசிகலா புஷ்பா எம்.பி. மீதான புகாரை வாபஸ் பெற மனு அளித்த பெண் தனக்கு பாதுகாப்பு கேட்டு, தூத்துக்குடி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி,
சசிகலா புஷ்பா எம்.பி. மீதான புகாரை வாபஸ் பெற மனு அளித்த பெண் தனக்கு பாதுகாப்பு கேட்டு, தூத்துக்குடி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
வழக்குநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்தவர் பானுமதி. அவருடைய சகோதரி ஜான்சிராணி. இவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், சசிகலா புஷ்பா எம்.பி. வீட்டில், நாங்கள் வேலை செய்த போது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் தெரிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சசிகலா புஷ்பா எம்.பி., அவருடைய கணவர் லிங்கேசுவரதிலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
சம்மன்இந்த நிலையில் சகோதரிகள் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ஒரு மனு சமீபத்தில் அனுப்பி உள்ளனர். அந்த மனுவில், சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக குறிப்பிட்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து மனுவின் உண்மைத் தன்மையை அறியும் வகையில் விசாரணை நடத்துவதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்து, பானுமதி, ஜான்சிராணி ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர்.
பாதுகாப்புஇந்த நிலையில்
நேற்று மாலையில் ஜான்சிராணி, தன்னுடைய கணவர் முத்துசுடலை, தந்தை ஜெயசீலன், தாய் பால்தங்கம் ஆகியோருடன் தூத்துக்குடி கோர்ட்டுக்கு வந்தார். அங்கு தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை முன்னிலையில் ஒரு மனுவை ஜான்சிராணி தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சசிகலா புஷ்பா எம்.பி மீதான புகாரை வாபஸ் பெறுவதாக மனு அனுப்பினேன். அதனால் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. எனது சகோதரியை காணவில்லை. ஆகையால் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்“ என்று தெரிவித்து இருந்தார்.
மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு, வருகிற 6–ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.