நெல்லை தாமிரபரணி ஆற்றில் 2–வது நாளாக போராட்டம் 120 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 2–வது நாளாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டம் நடைபெற்றது.
நெல்லை,
குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 2–வது நாளாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டம் நடைபெற்றது. இது சம்பந்தமாக 120 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாமிரபரணி ஆற்றில் போராட்டம்நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கு விதித்து இருந்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தாமிரபரணியில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெல்லையில் நேற்று முன்தினம் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர். நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி, ஆற்றில் பால் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2–வது நாளாக போராட்டம்நேற்று 2–வது நாளாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. நெல்லை கொக்கிரகுளத்தில் இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் செய்யது அலி மற்றும் முத்துக்குமார், மணிகண்டன், அஜித், திருப்பதி ராஜா, பொட்டல் ராஜா, இந்திரா, பீட்டர் உள்ளிட்டோர் தாமிரபரணி ஆற்றங்கரையில் நின்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கினர். அங்கு ஆற்றில் மிதந்து கொண்டிருந்த அமலைச் செடிகளை அகற்றினர். குளிர்பான ஆலைகளுக்கு ஆற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று கோஷமிட்டனர். அது சம்பந்தமான பாடல்களையும் பாடினர்.
பின்னர் அந்த குழுவினர் ஆற்றங்கரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சமூக வலைதள நண்பர்கள் மற்றும் மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாணவர் அமைப்பான சமூக நீதி மாணவர் பேரவை சார்பில் நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள பால்பண்ணை பஸ் நிறுத்தத்தில் கோக், பெப்சி ஆகிய குளிர்பானங்களை தரையில் கொட்டி, அந்த நிறுவனங்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க உடனடியாக தடை விதிக்க வலியுறுத்தினர்.
போராட்டத்துக்கு சமூக நீதி மாணவர் பேரவை நெல்லை மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். இதில் 44–வது வார்டு மனித நேய மக்கள் கட்சி செயலாளர் முகமது கவுஸ், பொருளாளர் பொன் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தண்ணீர் தொட்டியில் ஏறி போராட்டம்இதற்கிடையே சிவசேனா கட்சி நெல்லை மாவட்ட தலைவர் ரமேஷ் நேற்று மதியம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய குடியிருப்பு பகுதிக்கு வந்தார். அங்குள்ள 120 அடி உயர குடிநீர் தொட்டியில் ஏறினார். அதன் உச்சியில் நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க உடனடியாக தடை விதிக்க வேண்டும். இல்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் மாரிமுத்து, சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஷ் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் செல்போன் மூலம், ரமேசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நேரடியாகவும் பேசினார்கள். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு ரமேஷ் கீழே இறங்கி வர சம்மதித்தார். தீயணைப்பு வீரர்கள் அவரை பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர்.
கைதுஇதை தொடர்ந்து போலீசார் ரமேசை கைது செய்து, நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடந்த வருகிறது.