வாயில் புண்ணுடன் சுற்றித்திரியும் குட்டியானைக்கு சிகிச்சை


வாயில் புண்ணுடன் சுற்றித்திரியும் குட்டியானைக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 4 March 2017 3:30 AM IST (Updated: 4 March 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

துடியலூர் அருகே வாயில் புண்ணுடன் சுற்றித்திரியும் குட்டியானைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள பெரிய தடாகம், சின்ன தடாகம், வரப்பாளையம், ஆனைக்கட்டி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக வாயில் புண்ணுடன் ஒரு குட்டியானை சுற்றித்திரிந்து வருகிறது. அந்த யானை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். மேலும் காயத்துடன் சுற்றித்திரியும் குட்டியானையை தொடர்ந்து கண்காணித்து வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் வனப்பகுதியில் குட்டியானையுடன், தாய் யானையும் சுற்றி வருவதால் சிகிச்சை அளிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர்.

ஊசி மூலம் மருந்து செலுத்தினர்

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் வாயில் புண்ணுடன் சுற்றித்திரியும் குட்டியானை உள்பட 4 காட்டு யானைகள் பெரியதடாகம் அருகே அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில் மலையடிவார பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்குள் புகுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் வனக்கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பட்டாசு வெடித்து மற்ற யானைகளிடம் இருந்து குட்டியானையை தனிமைப்படுத்தினார்கள். அதன்பிறகு நோய் தடுப்பு மருந்தை துப்பாக்கி உதவியுடன் ஊசி மூலம் குட்டி யானைக்கு செலுத்தினர். மேலும் மாத்திரைகளை பழங்களில் பதித்து யானை செல்லும் வழித்தடங்களில் வைத்தனர்.

இந்த மருத்துவ சிகிச்சையால் குட்டியானை விரைவில் குணமடைந்துவிடும் என்று வனக்கால்நடை டாக்டர் மனோகரன் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story