நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை: ஜோதிடருக்கு ஆயுள் தண்டனை


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை: ஜோதிடருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 4 March 2017 3:45 AM IST (Updated: 4 March 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த ஜோதிடருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தேனி,

தேனியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த ஜோதிடருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

பெண் கொலை

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி தந்தைபெரியார் தெருவை சேர்ந்தவர் கொடியரசு (வயது 33). இவர் ஜோதிடராக உள்ளார். இவருடைய மனைவி சின்னப்பொன்னு (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொடியரசு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் 28–ந்தேதி கொடியரசு தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதில் கோபம் அடைந்த கொடியரசு தனது மனைவி சின்னப்பொன்னுவை கத்தியால் குத்தி கொலை செய்தார். அப்போது, சின்னப்பொன்னுவின் தந்தை ராஜாராம்ராவ் என்பவர் அங்கு வந்துள்ளார்.

ஆயுள் தண்டனை

அப்போது அவரை மிரட்டி விட்டு கொடியரசு தப்பி சென்று விட்டார். இந்த கொலை குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடியரசை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, மாவட்ட மகளிர் நீதிபதி தனியரசு நேற்று தீர்ப்பு அளித்தார்.

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்துக்காக கொடியரசுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், மாமனார் ராஜாராம்ராவை மிரட்டியதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொடியரசுவை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story