காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு கர்நாடக மக்களை கஷ்டத்தில் ஆழ்த்தும் தேவேகவுடா கண்ணீர் மல்க பேட்டி
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு கர்நாடக மக்களை கஷ்டத்தில் ஆழ்த்தும் என்று தேவேகவுடா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மைசூரு,
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு கர்நாடக மக்களை கஷ்டத்தில் ஆழ்த்தும் என்று தேவேகவுடா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தேவேகவுடா பேட்டிகர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா பன்னூரில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் மாலை முன்னாள் பிரதமரும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான தேவேகவுடா மைசூருவுக்கு வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–
காவிரி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதன் இறுதி தீர்ப்பு விரைவில் வெளியாகும். அந்த தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால் கர்நாடக அரசின் உரிமை பறிபோகும். மேலும் இந்த இறுதி தீர்ப்பு கர்நாடக மக்களை கஷ்டத்தில் ஆழ்த்தும்.
திட்டங்களின் பயன் கிடைக்கவில்லைஎனது வாழ்க்கையின் கடைசி நாட்களில் கர்நாடக மக்கள் தண்ணீருக்காக பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். அதை என்னால் பார்க்க முடியவில்லை. நான் முதல்–மந்திரியாக இருந்த போது கர்நாடகத்தின் நீர் ஆதாரங்களை காக்க நடவடிக்கை எடுத்தேன்.
அதேப் போல் பொதுமக்கள் பயன்படும் வகையில் பல்வேறு வகையான நீர்ப்பாசனத் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளேன். ஆனால் அந்த திட்டங்களின் பயன் முறையாக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைக்கவில்லை. இதனால் இன்று நமது மாநில மக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.