கொடைக்கானலில் வறண்டு போன அணைகள்; குடிநீர் வினியோகம் பாதிப்பு


கொடைக்கானலில் வறண்டு போன அணைகள்; குடிநீர் வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 3 March 2017 10:30 PM GMT (Updated: 3 March 2017 7:32 PM GMT)

கொடைக்கானலில் வறட்சி காரணமாக அணைகள் வறண்டு போய்விட்டன. இதனால் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் அப்சர்வேட்டரி பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 21 அடி ஆகும். இதனை பழைய அணை என்றும் அழைக்கின்றனர். இதில் தற்போது ½ அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதனை குடிநீருக்கு மின்மோட்டார் மூலம் உறிஞ்சப்பட முடியாத நிலையில் உள்ளது. மேலும் அணையின் நீர்ப்பிடிப்பில் பெரும்பாலான பகுதிகள் வறண்டு காட்சி அளிக்கின்றன.

இதே போல் அப்சர்வேட்டரி அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மனோரஞ்சிதம் அணையின் மொத்த உயரம் 36 அடியாகும். ஆனால் இந்த அணையிலும் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு போய்விட்டது. இதன் காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நகர் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு ஏரி அருகே உள்ள ஜிம்கானா பகுதியில் 20–க்கும் மேற்பட்ட ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நகரில் மூஞ்சிக்கல், ஆனந்தகிரி ஆகிய பகுதிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அருகேயுள்ள பிற பகுதிகளுக்கு சென்று ஊற்றுநீர், ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

நகர் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கு தேவையான தண்ணீர் ஏரியில் இருந்து இரவு நேரம் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்த ஏரி தண்ணீர் சுகாதாரம் இல்லாமல் இருப்பதால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாடு

கொடைக்கானல் நகர் பகுதிக்கு குடிநீர் உறிஞ்சப்படும் அணைகள் வறண்டு இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘போதிய மழை பெய்யாததால் அணைகள் வறண்டு போய்விட்டன. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேடான பகுதிகளுக்கு லாரிகள் மூலமாகவும், இன்னும் சில பகுதிகளுக்கு குழாய் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது’ என்றனர்.

குடிநீர் பற்றாக்குறை குறித்து பொதுமக்களிடம் கேட்ட போது, ‘குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படும் குடிநீர் 1 மணி நேரம் மட்டும் வருகிறது. அது போதுமானதாக இல்லை. மேலும் சுத்திகரிக்கப்படாமல் இருப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது’ என்றனர்.


Next Story