ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்துசெய்யக்கோரி நெடுவாசலில் 16–வது நாளாக போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்துசெய்யக்கோரி நெடுவாசலில் 16–வது நாளாக போராட்டம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16–ந் தேதி முதல் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 16–வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.
இந்த போராட்டத்துக்கு 100 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் போராட்ட குழுவினராக செயல்பட்டு வருகிறார்கள். இந்த போராட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் கடந்த 1–ந்தேதி தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.
போராட்டம் தொடரும்
அப்போது நெடுவாசல் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும், விவசாயிகளும், கிராம மக்களும் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று கிராம மக்களிடம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய போராட்ட குழுவினர், போராட்ட களத்தில் உள்ள மக்களோடும், இளைஞர்களோடும் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்படி நெடுவாசல் பகுதியில் 100 கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் போராட்ட குழுவினரின் ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெடுவாசல் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்க்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் ‘‘மத்திய அரசு நிரந்தரமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் ஆதரவுஇதைத்தொடர்ந்து நெடுவாசலில் நேற்றும் 16–வது நாளாக நடந்த போராட்டம் தொடர்ந்தால் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் போராட்டத்திற்கு தி.மு.க. சார்பில் ஆதரவு தெரிவிக்க தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தார். பின்னர் கார் மூலம் நெடுவாசலுக்கு பலத்த போலீஸ் காப்புடன் சென்றார். பின்னர் அங்கு கூடி இருந்த பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்து, போராட்டத்தின் நடுவே சென்று தரையில் அமர்ந்தார். அப்போது மழை குறுக்கிட்டது. அதனை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தப்படி பேசினர். அப்போது அங்கு கூடி இருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் கே.என்.நேரு, மெய்யநாதன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஐவரூல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் பா.ம.க. தலைவர் அண்புமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ராஜா மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் நெடுவாசலுக்கு வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.