ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த 16–ந் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் கிராம பொது மக்கள், விவசாய அமைப்பினர், அரசியல் கட்சியினர், திரை உலகினர், ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனால் நெடுவாசல் போராட்டம் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து உள்ளது. இந்த நிலையில் நெடுவாசல் போராட்ட குழு பிரதிநிதிகள் சென்னையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையிட்டனர். அது மட்டுமின்றி தமிழகத்தில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் முதல்–அமைச்சர் அறிவித்தார்.
தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
நேற்றுமுன்தினம் நெடுவாசல் போராட்ட குழு பிரதிநிதிகள் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கிராம தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேசை சந்தித்து நெடுவாசல் போராட்டம் குறித்து பேசுவது என்று முடிவு செய்தனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Next Story