எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பொருட்கள் அனுப்ப வசதியாக இருக்கும் தொழில் அதிபர்கள் கருத்து


எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பொருட்கள் அனுப்ப வசதியாக இருக்கும் தொழில் அதிபர்கள் கருத்து
x
தினத்தந்தி 4 March 2017 3:15 AM IST (Updated: 4 March 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து ராஜஸ்தானுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கரூரில் இருந்து பொருட்கள் அனுப்ப வசதியாக இருக்கும் என்று தொழில் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது. வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு திருச்சியில் இருந்து இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் சென்று அடையும். இந்த ரெயில் வியாழக்கிழமை நள்ளிரவு 1.10 மணிக்கு (ரெயில்வே நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை) கரூர் ரெயில் நிலையம் வந்தடையும். பின்னர் 1.15 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை வழியாக கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜபுரம் சென்று அதன் பிறகு மராட்டிய மாநிலம் சூரத் வழியாக குஜராத் மாநிலம் சென்று பின்னர் ராஜஸ்தான் ஸ்ரீ கங்காநகர் செல்கிறது. இந்த புதிய ரெயில் கரூர் வழியாக இயக்கப்படுவதால் கரூரில் உள்ள தொழில் அதிபர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து ஜவுளி உற்பத்தி மற்றும் பல்வேறு தொழில் அதிபர்கள் கூறியதாவது:–


வரவேற்கிறோம்

கரூரில் ஜவுளி உற்பத்தி பொருட்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. அதன்படி ஜவுளி உற்பத்தி தொழில் சிறந்து விளங்குகிறது. அதேபோன்று பஸ் கூண்டு கட்டும் நிறுவனம், கொசு வலை தயாரிப்பு நிறுவனங்களும் கரூரில் அதிக அளவு உள்ளன. இந்நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் கர்நாடகா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து பஸ், கூரியர் நிறுவனம் மூலம் தான் இப்பொருட்கள் பெறப்படுகிறது. இதனால் பொருட்களை பெற 7 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக விடப்பட்டுள்ள ரெயில் மூலம் பொருட்கள் அனுப்பினால் 36 மணி நேரத்திற்குள் கிடைத்து விடும். இதனால் உற்பத்தி பெருகும். மேலும் தொழில்களும் வளர்ச்சி அடையும். அதேபோன்று இங்கிருந்தும் பொருட்கள் அனுப்பவும், வெளி மாநிலத்தில் இருந்து வாங்கவும் வசதியாக இருக்கும். எனவே இந்த ரெயில் சேவையை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story