ரூ.1 லட்சம் வாங்கிக்கொண்டு போலி பணிநியமன ஆணை வழங்கிய வாலிபர் கைது
டிப்ளமோ முடித்தவரிடம் ரூ.1 லட்சம் வாங்கிக்கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்,
தாராபுரத்தில், டிப்ளமோ முடித்தவரிடம் ரூ.1 லட்சம் வாங்கிக்கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
டிப்ளமோ படித்தவர்திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஜெய்லாப்தீன். இவரது மகன் தமிமுல் அன்சாரி (வயது 24). டிப்ளமோ படித்து விட்டு தாராபுரம் அமராவதி சிலை அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவருடைய பெட்டிக்கடை அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தனி அருகே உள்ள திருவாலங்காட்டை சேர்ந்த முரளி (32) என்பவர் தங்கி இருந்தார். அப்போது தமிமுல் அன்சாரியுடன், முரளிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிமுல் அன்சாரி டிப்ளமோ முடித்து இருப்பதை தெரிந்து கொண்ட முரளி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் எழுத்தர் வேலை காலியாக இருப்பதாகவும், ரூ.1 லட்சம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
முரளியின் வார்த்தைகளை நம்பிய தமிமுல் அன்சாரி அவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட முரளி சென்னை சென்று பணி நியமன உத்தரவை கையோடு வாங்கி வருவதாக தெரிவித்து விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு ஒருவாரம் கழித்து விடுதிக்கு வந்த முரளி, தமிமுல் அன்சாரியை சந்தித்து பணி நியமன உத்தரவை அவரிடம் கொடுத்துள்ளார். பிறகு ஊருக்குச் சென்றுவருவதாக தெரிவித்துவிட்டு, முரளி விடுதியை காலி செய்து விட்டு சென்று விட்டார்.
போலி பணிநியமன ஆணைஅதன் பிறகு தமிமுல் அன்சாரி பணி நியமன உத்தரவை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று கொடுத்துள்ளார். அப்போதுதான் அந்த பணி நியமன ஆணை போலியாக தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று தமிமுல் அன்சாரி தாராபுரம் போலீஸ் நிலையத்தில் முரளி மீது புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து முரளியை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பஸ்நிலையம் அருகே தமிமுல் அன்சாரி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கிருந்த உணவு விடுதியில் முரளி சாப்பிட்டுவிட்டு வெளியே வருவதை பார்த்தார். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் விரைந்து சென்று முரளியை கைது செய்தனர். இந்த சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் முரளி பல இடங்களில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தாராபுரம், திருப்பூர், உடுமலை ஆகிய பகுதிகளில் மட்டும் 7 பேரிடம் மோசடி செய்து, தலா ரூ.50 ஆயிரம் வீதம் பணத்தை வாங்கி ஏமாற்றி இருப்பதும், நேரடியாக பணத்தை வாங்காமல் வெளியூரில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தச் சொன்னதும் தெரியவந்தது. அதன் பிறகு போலீசார் முரளியை கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.