முன்னாள் முதல்–மந்திரி பங்காரப்பாவின் மகன் குமார் பங்காரப்பா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல் பா.ஜனதாவில் சேருகிறார்


முன்னாள் முதல்–மந்திரி பங்காரப்பாவின் மகன் குமார் பங்காரப்பா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல் பா.ஜனதாவில் சேருகிறார்
x
தினத்தந்தி 4 March 2017 2:30 AM IST (Updated: 4 March 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்–மந்திரி பங்காரப்பாவின் மகன் குமார் பங்காரப்பா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் பா.ஜனதாவில் சேருகிறார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்–மந்திரி பங்காரப்பாவின் மகன் குமார் பங்காரப்பா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் பா.ஜனதாவில் சேருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்–மந்திரி பங்காரப்பாவின் மகனுமான குமார் பங்காரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வருத்தம் அளிக்கிறது

காங்கிரஸ் கட்சியில் இடைத்தரகர்கள், முகவர்கள் பிரச்சினையால் வெறுப்படைந்து கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா சொன்னது போல் காங்கிரஸ் கட்சிக்கு ‘மேலாளர்கள்‘ இருந்தால் போதும், மூத்த தலைவர்கள் தேவை இல்லை என்ற கருத்து உண்மை. இதன் காரணமாக தான் நாட்டில் காங்கிரஸ் பலம் இழந்து மோசமான நிலையில் உள்ளது.

நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. மற்றொருபுறம் நான் எடுத்துள்ள இந்த முடிவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நான் கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வருக்கு அனுப்பியுள்ளேன். அதில் அனைத்து விவரங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

மந்திரி காகோடு திம்மப்பா

நான் வேறு கட்சியில் சேர்ந்தாலும் எனது கொள்கையில் இருந்து விலக மாட்டேன். காங்கிரஸ் கட்சி என்னை ஓரங்கட்டியது. அதனால் நான் தவிர்க்க முடியாமல் இந்த முடிவை எடுத்தேன். சிவமொக்கா மாவட்ட பொறுப்பு மந்திரியாக பணியாற்றி வரும் காகோடு திம்மப்பா பழிவாங்கும் அரசியல் நடத்துகிறார். எனது தந்தை பங்காரப்பா இருந்தபோது அவர் செயல்பட்டது போல் இப்போதும் அவர் பழிவாங்கும் அரசியலை நடத்துகிறார்.

இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற காரணங்களால் நான் காங்கிரசில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டேன். சிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மாநில காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு நான் பல முறை புகார் தெரிவித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கு கோஷ்டி அரசியல் நடக்கிறது. இதை தடுக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.

எனது தந்தை–தாய் இறந்த பிறகு அந்த உணர்வுப்பூர்வமான வி‌ஷயங்களை முன்வைத்து சிலர் அரசியல் நடத்துகிறார்கள். (அவருடைய தம்பியும், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வுமான மது பங்காரப்பாவை மறைமுகமாக குறிப்பிட்டு இதை கூறினார்). இது அதிக நாட்கள் நீடிக்காது.

இவ்வாறு குமார் பங்காரப்பா கூறினார்.

பா.ஜனதாவில் சேருகிறார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள குமார் பங்காரப்பா விரைவில் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேருகிறார். இதுகுறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story