பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் நாராயணசாமி தகவல்
புதுவை பாரதிதாசன் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பட்டங்களையும், தங்கப்பதக்கங்களையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
14 சதவீத நிதிபாரதிதாசன் மகளிர் கல்லூரியில் மிகச்சிறந்த முறையில் பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் மாணவிகளுக்கு கல்வியை கற்றுதருகின்றனர். மத்திய அரசு கல்விக்காக பட்ஜெட்டில் 9 சதவீத நிதியைத்தான் ஒதுக்குகிறது. ஆனால் புதுவை அரசு 14 சதவீத நிதியை கல்விக்காக ஒதுக்குகிறது.
புதுச்சேரியில் 18 என்ஜினீயரிங் கல்லூரிகள், 9 மருத்துவக்கல்லூரிகள், பல்வேறு கலைக்கல்லூரிகள் இயங்குகின்றன. அரசு கல்லூரிகளில் சிறப்பான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களின் பொது சமுதாய பங்களிப்பு திட்டங்களின் கீழ் பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி உள்ளோம். இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களை அணுகியுள்ளோம்.
திறன்மேம்பாடுபட்டமேற்படிப்பு படிப்பவர்கள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி செய்தால்தான் புதிய புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். அவர்கள் ஆராய்ச்சி படிப்பிலும் ஈடுபட வேண்டும்.
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திறன் மேம்பாடு என்பது மிக அவசியம். புதுவை 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலம். ஒரு கல்விக்கேந்திரமாக இது திகழ்கிறது. புதுவை வேளாண்கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்பட உள்ளது.
புதிய பாடப்பிரிவுகள்சுகாதாரத்திலும் புதுச்சேரி முதன்மை இடத்தில் உள்ளது. புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபின் வேலைவாய்ப்பும் பெருகி உள்ளது. நமது நாட்டில் மனிதவளம் அதிகமாக உள்ளது.
புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். அங்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். புதுவையில் உள்ள சட்டக்கல்லூரியை தேசிய சட்டப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
பெண்களுக்கு வேலைதிருச்சியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி துணைவேந்தர் கமலா சங்கரன் பேசும்போது, தற்போது பட்டப்படிப்பு படிக்கும் எண்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்து உள்ளது. என்ஜினீயரிங் படிப்பில் பெண்கள் அதிக அளவில் வேலை பெற்று உள்ளனர். ராணுவம் உள்ளிட்டவற்றில் பணியாற்ற பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
விழாவில் கல்வித்துறை செயலாளர் நரேந்திரகுமார், உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். 4 பேருக்கு முனைவர் பட்டம், 16 பேருக்கு முதுகலை பட்டம், 18 பேருக்கு தங்கப்பக்கம் என 578 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.