மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் தேவேகவுடா சந்திப்பு கோமதேஸ்வரர் கோவில் மகா மஸ்தாபிஷேகத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை
மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை முன்னாள் பிரதமர் தேவேகவுடா சந்தித்து பேசினார். அப்போது கோமதேஸ்வரர் கோவில் மகா மஸ்தாபிஷேகத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பெங்களூரு,
மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை முன்னாள் பிரதமர் தேவேகவுடா சந்தித்து பேசினார். அப்போது கோமதேஸ்வரர் கோவில் மகா மஸ்தாபிஷேகத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மகா கும்பாபிஷேக திருவிழாமத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை டெல்லியில் நேற்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேரில் சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உள்ள பிரசித்திபெற்ற கோமதேஸ்வரர் கோவில் மகா மஸ்தாபிஷேகத் திருவிழாவுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்குமாறு தேவேகவுடா கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தேவேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:–
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் கோமதேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு 57 அடி உயரத்திற்கு பாகுபலி சாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகழ்பெற்ற கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா மஸ்தாபிஷேக திருவிழா நடக்கிறது. கடைசியாக கடந்த 2006–ம் ஆண்டு இந்த விழா நடைபெற்றது.
ரூ.300 கோடி நிதி ஒதுக்குமாறு...அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகா மஸ்தாபிஷேகம் நடக்கவுள்ளது. இதில் சுமார் 60 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியது அவசியம். இதற்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லியிடம் கோரிக்கை விடுத்தேன். கடந்த முறை அதாவது 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இதே மகா மஸ்தாபிஷேக திருவிழாவுக்கு அப்போது இருந்த மத்திய அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கியது.
ஆனால் தற்போதைய மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்துவிட்டது. பிரதமரிடம் இதுபற்றி எடுத்து கூறினேன். இப்போது அருண்ஜெட்லியிடம் நிதி ஒதுக்குமாறு கேட்டுள்ளேன். அவர் சாதகமான பதிலை கூறி இருக்கிறார். அதே போல் ஹாசன் நகரை சீர்மிகு நகர பட்டியலில் சேர்க்குமாறும் அருண்ஜெட்லியிடம் கோரிக்கை விடுத்தேன். ஹாசன் சுற்றுலா தலமாகவும் உள்ளது. மேலும் ஹாசனில் பெரிய பால் பண்ணை மையத்தை அமைக்கவும் உதவி செய்யுமாறு கேட்டேன்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.