வருகிற 9–ந் தேதி முதல் சத்துணவு அமைப்பாளர்–சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


வருகிற 9–ந் தேதி முதல் சத்துணவு அமைப்பாளர்–சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 March 2017 4:00 AM IST (Updated: 4 March 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 9–ந் தேதி முதல் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழகத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள 35 அமைப்பாளர் மற்றும் 63 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்திட வருகிற 9–ந் தேதி முதல் 11–ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் அனைத்துக்கும் விண்ணப்பிப்பதற்கு பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். எனவே குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் தகுதியுள்ள நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப மாதிரிப் படிவம், காலிப்பணியிடங்கள் விவரம் மற்றும் இனசுழற்சி விவரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளன. குமரி மாவட்ட இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளன.

ஊராட்சி ஒன்றியம் வாரியாக அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிட விவரம் வருமாறு:–

எந்தெந்த ஊராட்சிகளில்...

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில்4 சமையல் உதவியாளர் பணியிடங்களும், தோவாளை ஒன்றியத்தில் 11 அமைப்பாளர் மற்றும் 10 சமையல் உதவியாளர் பணியிடங்களும், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 8 அமைப்பாளர் மற்றும்8 சமையல் உதவியாளர் பணியிடங்களும், குருந்தங்கோடு ஒன்றியத்தில் 1 அமைப்பாளர் மற்றும் 4 சமையல் உதவியாளர் பணியிடங்களும், தக்கலை ஒன்றியத்தில் 2 அமைப்பாளர் மற்றும் 7 சமையல் உதவியாளர் பணியிடங்களும், திருவட்டார் ஒன்றியத்தில் 3 அமைப்பாளர் மற்றும் 10 சமையல் உதவியாளர் பணியிடங்களும், கிள்ளியூர் ஒன்றியத்தில் 4 அமைப்பாளர் மற்றும் 9 சமையல் உதவியாளர் பணியிடங்களும், முன்சிறை ஒன்றியத்தில் 3 அமைப்பாளர் மற்றும் 4 சமையல் உதவியாளர் பணியிடங்களும், மேல்புறம் ஒன்றியத்தில் 3 அமைப்பாளர் பணியிடங்கள் மற்றும் 7 சமையல் உதவியாளர் பணியிடங்களும் ஆக மொத்தம் 35 அமைப்பாளர் பணியிடங்களும், 63 சமையல் உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

9–ந் தேதி முதல்

இந்த பணியிடங்களுக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மேற்கூறிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள விண்ணப்பம் பதிவேற்றும் கம்ப்யூட்டர் அலுவலர்கள் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் குறிப்பிட்ட நாட்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வட்டாரங்களின் பணியிடங்களுக்கு நேரில் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்று கொள்ளலாம். அலுவலக நேரத்திற்குப் பிறகு காலதாமதமாக தபால் மூலமோ, நேரிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் கலெக்டர் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

வருகிற 9–ந் தேதிஅகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கும், 10–ந் தேதி குருந்தங்கோடு, தக்கலை, திருவட்டார் ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கும், 11–ந் தேதி கிள்ளியூர், முன்சிறை, மேல்புறம் ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறும்.

இத்தகவலை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.


Next Story