3–வது வழித்தடத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் சேவை எம்.எம்.ஆர்.சி. அதிகாரி தகவல்


3–வது வழித்தடத்தில்  டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் சேவை எம்.எம்.ஆர்.சி. அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 March 2017 9:31 PM GMT (Updated: 2017-03-04T03:00:38+05:30)

மும்பையில் 3–வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லா ரெயில்கள் இயக்கப்படும் என்று எம்.எம்.ஆர்.சி. அதிகாரி கூறினார்.

மும்பை,

மும்பையில் 3–வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லா ரெயில்கள் இயக்கப்படும் என்று எம்.எம்.ஆர்.சி. அதிகாரி கூறினார்.

3–வது வழித்தடம்

மும்பையில் பெருகி வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மோனோ, மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதில், 3–வது மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடம் கொலபா–பாந்திரா–சீப்ஸ் வரை 33.5 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடம் சுரங்கமார்க்கமாக அமைக்கப்பட உள்ளது. 27 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒன்றை தவிர மற்ற 26 ரெயில் நிலையங்களும் பூமிக்கடியில் அமைய உள்ளன. இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் சேவை

இந்தநிலையில், மும்பைவாசிகளுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் மும்பை மெட்ரோ ரெயில் கழகம்(எம்.எம்.ஆர்.சி.) ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது 3–வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் டிரைவர்கள் இன்றி இயக்கப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு. இதுபற்றி மும்பை மெட்ரோ ரெயில் கழக இயக்குனர் (சிஸ்டம்) ஏ.ஏ.பட் கூறியதாவது:–

27 நாடுகளில் மெட்ரோ ரெயில்கள் டிரைவர்கள் இன்றி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோன்ற தொழில்நுட்பத்தின் மூலம் 3–வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

மேம்பட்ட சிக்னல் அமைப்பு

இந்த வழித்தடத்தில் 2021–ம் ஆண்டு மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து ஒரு வருடத்திற்கு டிரைவர்கள் கொண்டே இயக்கப்படும். அதன்பின்னர் தான் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகம் செய்யப்படும். இதற்காக மேம்பட்ட சிக்னல் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

அதே நேரத்தில் ஒவ்வொரு மெட்ரோ ரெயில் நிலையத்திலும் டிரைவர்கள் இருப்பார்கள். அவசர நேரத்தில் அவர்கள் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கு பயன்படுத்தப்படுவார்கள்.

31 மெட்ரோ ரெயில்

டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கு கடந்த ஆண்டு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றது. அதன்படி டெல்லியில் 2 வழித்தடங்களில் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்தின் வழிகாட்டுதலின்படி மும்பையில் 3–வது மெட்ரோ ரெயில் வழித்தடத்திலும் டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழித்தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட 38 மெட்ரோ ரெயில்களை வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்க இருந்தது. ஆனால் தற்போது 8 பெட்டிகள் கொண்ட 31 மெட்ரோ ரெயில்களை வாங்க தீர்மானித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story