போடி பகுதிகளில் தொடர் மழை: கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
போடி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தினமும் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக போடி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
போடி அருகே கொட்டக்குடியில் உற்பத்தியாகும் இந்த ஆறு தேனியில் முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. பல மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த இந்த ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சிதேனி கொட்டக்குடி ஆற்றில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இந்த ஆற்றின் மூலம் போடி, மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, தேனி போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் ஆற்றில் போதிய நீர்வரத்து ஏற்படவில்லை. இதனால் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.
இந்த ஆறு மூலம் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மழை பெய்துள்ளது. ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த ஆற்றில் சாக்கடை கழிவுநீர் பல இடங்களில் குட்டையாக தேங்கி நின்று கொசுத்தொல்லையை ஏற்படுத்தி வந்தது. தற்போது மழை வெள்ளத்தில் சாக்கடை கழிவுநீர் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.