டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 16 March 2017 4:15 AM IST (Updated: 16 March 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேனு என்.பி. நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை ஊர்தலைவர் பெள்ளிராஜ் தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் மனு ஒன்றை அளித்தனர்.

 அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கோத்தகிரி அருகே அரவேனு என்.பி.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளது. இதன் அருகே பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. மேலும் கோவிலும் உள்ளது. இதுதவிர பச்சை தேயிலை பறிப்பதற்காக பெண் தொழிலாளர்கள் இந்த பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கைவிட வேண்டும். இல்லையென்றால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் அருவங்காட்டில் இருந்து ஜெகதளா செல்லும் சாலையில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.


Next Story