சொத்து வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் மாநகராட்சி கமி‌ஷனர் எச்சரிக்கை


சொத்து வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் மாநகராட்சி கமி‌ஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீதம் வரிவசூல் செய்ய இலக்கு சொத்து வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் மாநகராட்சி கமி‌ஷனர் எச்சரிக்கை

கோவை,

கோவை மாநகராட்சிக்கு 100 சதவீதம் வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும, சொத்து வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

100 சதவீத வரி வசூல்

கோவை மாநகராட்சிக்கு வரி வசூல் மற்றும் வருவாயை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை கமி‌ஷனர் காந்திமதி, உதவி கமி‌ஷனர் ரவிக்குமார், மண்டல உதவி கமி‌ஷனர்கள், வரி வசூல் ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன் பேசும் போது கூறியதாவது:–

கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளில் சொத்துவரி செலுத்தாத வரிதாரர்கள் உடனடியாக அனைத்து வரிகளையும் செலுத்த வேண்டும். வரி வசூல் செய்பவர்கள், அவர்களுடைய வார்டு பகுதிகளில் வரி செலுத்தாத நிலுவைதாரர்களிடம் தீவிர வரிவசூல் பணியில் ஈடுபட்டு 100 சதவீதம் வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சொத்துவரி மற்றும் இதர வரிகள் செலுத்தாத நிலுவைதாரர்களின் குடிநீர் குழாய் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வரி செலுத்தாத நிலுவைதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story