வாளையார் சோதனைச்சாவடியில் 36 மணிநேரம் சரக்கு வாகனங்கள் காத்திருப்பதால் பாதிப்பு
வாளையார் சோதனைச்சாவடியில் 36 மணிநேரம் சரக்கு வாகனங்கள் காத்திருப்பதால் பாதிப்பு கேரள கவர்னர், முதல்–மந்திரியை சந்தித்து தமிழக லாரி உரிமையாளர்கள் முறையீடு
கோவை,
வாளையார் சோதனைச்சாவடியில் 36 மணிநேரம் சரக்கு வாகனங்கள் காத்திருப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேரள கவர்னர், முதல்–மந்திரியை சந்தித்து தமிழக லாரி உரிமையாளர்கள் முறையிட்டனர்.
36 மணிநேரம் காத்திருப்புகோவையில் இருந்து 500 சரக்கு லாரிகள் மற்றும் தமிழகம், கர்நாடகம் உள்பட வடமாநிலங்களில் இருந்து தினமும் 2,500–க்கும் மேலான சரக்கு லாரிகள் கேரளா செல்கிறது. இதில் கோவையில் இருந்து கேரளா எல்லையில் உள்ள வேலந்தாவளம் சோதனைச்சாவடி வழியாக 1,500 லாரிகள் சென்று வந்தன.
வேலந்தாவளம் சோதனைச்சாவடி அருகே கேரளா பகுதியில் பாலம் பழுதடைந்துள்ளதால் இந்த பகுதியில் 6 சக்கரத்துக்கும் மேல் உள்ள லாரிகள் மற்றும் 9 டன் எடைக்கு மேல் உள்ள லாரிகள் செல்லக்கூடாது என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக சென்ற சரக்கு வாகனங்கள் வாளையார் சோதனைச்சாவடி வழியாக சென்று வருகின்றன. வழக்கமாக 6 மணிநேரம் காத்திருந்து செல்லும் லாரிகள் தற்போது 36 மணிநேரம் காத்திருந்த பின்னர் செல்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களும், லாரி டிரைவர்களும் பல்வேறு பிரச்சினைக்குள்ளாகி வருகின்றனர்.
கவர்னர், முதல்–மந்திரியுடன் சந்திப்புஇதைத்தொடர்ந்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி, செயலாளர் தனராஜ், கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர்கள் செல்வராஜ்(சங்ககிரி), ராமசாமி(பெருந்துறை), முத்துசாமி(பவானி–குமாரபாளையம்), வாங்கிலி(நாமக்கல்) உள்ளிட்ட நிர்வாகிகள் கேரள கவர்னர் சதாசிவம், முதல்–மந்திரி பினராய் விஜயன் ஆகியோரை சந்தித்து முறையிட்டனர்.
மேலும் வாளையார் சோதனைச்சாவடியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் மனு கொடுத்தனர். இதுகுறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் கூறியதாவது:–
கூடுதல் மையங்கள்கேரள முதல்–மந்திரி மற்றும் கவர்னரிடம் வாளையார் சோதனைச்சாவடி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாளையார் சோதனைச்சாவடியில் 36 மணிநேரம் காத்திருப்பதை தவிர்க்க சோதனைச்சாவடியில் கூடுதல் மையங்களை திறந்து கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். சரக்கு வாகனங்களை தனியார் இடத்தில் நிறுத்த வேண்டியது இருப்பதால் வாடகை செலுத்த வேண்டியது உள்ளது. எனவே பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது.
பால், காய்கறி மற்றும் உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களை ‘கிரீன் சேனல்’ திட்டத்தின் மூலம் சோதனையின்றி உடனடியாக அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குஜராத் மாநிலத்தில் உள்ளதை போல நவீன ‘ஸ்கேனிங்’ வசதி செய்யவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வேலந்தாவளம் சோதனைச்சாவடி வழியாக சரக்கு லாரி போக்குவரத்தை அனுமதிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.