திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2–வது நாளாக ஊரக வளர்ச்சி துறையினர் வேலைநிறுத்தம்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2–வது நாளாக ஊரக வளர்ச்சி துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்,
சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலாளர்கள், கணினி இயக்குனர்கள், சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊராட்சி செயலாளர்கள், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றிய அலுவலகங்கள் முன் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடந்தது.
2–வது நாளாக தொடர்கிறதுநேற்று முன்தினம் தொடங்கிய இந்த வேலை நிறுத்த போராட்டம், நேற்று 2–வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான ஒன்றிய அலுவலகங்களும், கிராம ஊராட்சி அலுவலகங்களும் பூட்டப்பட்டு இருந்தன. மாற்று சங்கத்தை சேர்ந்த ஒரு சில ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தெற்கு உழவர் சந்தையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுபோல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.