அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 3–வது மண்டல அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் மாநகராட்சி 3–வது மண்டல அலுவலகம் முற்றுகை
பொங்கலூர்,
திருப்பூர் மாநகராட்சி 3–வது மண்டலத்துக்கு உட்பட்ட 38–வது வார்டில் அத்திமரத்துபுதூர், பள்ளக்காட்டுபுதூர், ராக்கியாபாளையம், நல்லூர், காளியப்பாநகர் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை, சாக்கடை சுத்தம் செய்யப்படவில்லை, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
எனவே இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, 38–வது வார்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நல்லூரில் உள்ள 3–வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் கவுன்சிலர் கோபால்சாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் முருகசாமி, அன்பழகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். இந்த போராட்டத்தின்போது அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என்று கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோஷமிட்டனர். மேலும், மண்டல அலுவலகத்திற்கு செல்லும் வழியில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டல மேற்பார்வையாளர் கனகராஜ், போலீஸ் உதவி கமிஷனர் மணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.