தண்ணீர் லாரி வரும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் பெண்கள் கோரிக்கை


தண்ணீர் லாரி வரும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் பெண்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் லாரி வரும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை,

சென்னையில் தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடிக்க இரவு பகலாக காத்திருக்க வேண்டி இருப்பதால், தண்ணீர் லாரி வரும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

லாரிகள் மூலம் தண்ணீர்

தண்ணீர் பஞ்சம் தொடங்கி உள்ளதால் சென்னையில் பல இடங்களில் வீடுகள் மற்றும் பொதுக்குழாய்களில் குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் தங்கள் பகுதிக்கு எப்போது லாரி வரும் என்று காத்திருந்து பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது.

இதற்காக சென்னை முழுவதும் 550 லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் பல லாரிகள் மூலம் தெருக்களில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. சில லாரிகள் தெருக்களுக்கு சென்று பொதுமக்களுக்கு நேரடியாக தண்ணீர் வினியோகம் செய்யும் பணியை மேற்கொள்கின்றன.

லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவது குறித்து வில்லிவாக்கம் திருவேங்கடம் நகர் முதல் தெருவை சேர்ந்த ராஜலட்சுமி கூறியதாவது:–

லாரி வரும் நேரம்

வீடு மற்றும் பொதுக்குழாய்களில் பல மாதங்களாக குடிநீர் வரவில்லை. லாரிகளில் குடிநீர் பிடிப்பதால் பல பெண்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை. லாரிகளில் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் வினியோகம் செய்வது கிடையாது. சில நாட்களில் இரவு 11 மணிக்கு கூட தண்ணீர் லாரி வருகிறது.

இரவு பகலாக காத்திருந்து லாரியில் தண்ணீர் பிடிக்கிறோம். சென்னை நகரில் எந்த பகுதிக்கு எத்தனை மணிக்கு தண்ணீர் லாரி வரும் என்று நேரம் வகுக்க வேண்டும்.

இவ்வாறு ராஜலட்சுமி தெரிவித்தார்.

தண்ணீர் பிடிக்க காத்திருந்த மற்றொரு பெண் கூறியதாவது:–

முறைப்படுத்துங்கள்

குடிநீர் வரியை மட்டும் மாநகராட்சி பெற்றுக்கொள்கிறது. ஆனால் குடிநீரை முறையாக வினியோகிப்பது இல்லை. குழாய்களில் குடிநீர் வந்து மாதக்கணக்கில் ஆகிறது. தண்ணீர் லாரி எப்போது வரும்? என்று கூற முடியாது. அவர்கள் இஷ்டத்திற்கு வருவார்கள். சில சமயங்களில் பெண்கள் சமையல் செய்யும் போதும், அவர்கள் அயர்ந்து தூங்கும் நேரத்திலும் லாரி வரும்.

அதுவும் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் வினியோகம் செய்தால் நன்றாக இருக்கும். தண்ணீர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல் தண்டையார் பேட்டை சுனாமி நகரைச் சேர்ந்த ருக்குமணி கூறுகையில், ‘நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். எங்கள் பகுதிக்கு குழாயில் காலையில் மட்டும் தான் தண்ணீர் வருகிறது. அருகில் உள்ள மாநகராட்சி குடிநீர் தொட்டியில் லாரிகளில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அதனால் அந்த தண்ணீரை பயன்படுத்துகிறோம். தாராளமாக தண்ணீர் பயன்படுத்தும் நிலையில் நாங்கள் இல்லை. நாங்கள் யாருக்கும் ஓட்டு போட மாட்டோம்’ என்று தெரிவித்தார். 

Next Story