பழைய பேப்பர் கடையில் ரேஷன் கார்டு விண்ணப்ப படிவங்கள்: வட்ட வழங்கல் அதிகாரி விசாரணை
பழைய பேப்பர் கடையில் ரேஷன் கார்டு விண்ணப்ப படிவங்கள் கிடந்ததால் பரபரப்பு வட்ட வழங்கல் அதிகாரி விசாரணை
தாளவாடி,
தாளவாடி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பழைய பேப்பர் கடையில் ரேஷன் கார்டு விண்ணப்ப படிவங்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தாளவாடி வட்ட வழங்கல் அதிகாரி காளிரத்தினம் விசாரணை நடத்தி வருகிறார்.
பழைய பேப்பர் கடைதாளவாடி பஸ் நிலையம் அருகே சாம்ராஜ் நகர் ரோட்டில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் எதிரே பழைய பேப்பர் கடை உள்ளது. இந்த கடையின் ஊழியராக தாளவாடியை சேர்ந்த நஜீம் என்பவர் வேலை செய்து வருகிறார்.
இவர் வழக்கம்போல் நேற்று காலை கடையை திறந்து பழைய பேப்பர்களை பிரித்து அடுக்கி வைத்து கொண்டிருந்தார். அப்போது பழைய பேப்பர் கட்டுடன் ஒரு பண்டல் இருந்ததை நஜீம் கண்டார். உடனே அந்த பண்டலை பிரித்து பார்த்தார்.
விண்ணப்ப படிவங்கள்அதில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப படிவங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பழைய பேப்பர் கடை முன்பு கூடினர்.
இதுபற்றி அறிந்ததும் தாளவாடி வட்ட வழங்கல் அதிகாரி காளிரத்தினம் உடனே பழைய பேப்பர் கடைக்கு வந்து அங்கிருந்த விண்ணப்ப படிவங்களை ஆய்வு செய்தார். மொத்தம் 32 விண்ணப்ப படிவங்கள் இருந்தன. அந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.
விசாரணைஇதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி காளிரத்தினம் கூறுகையில், ‘பழைய பேப்பர் கடையில் உள்ள விண்ணப்ப படிவங்களை பார்த்தேன். அந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ரேஷன் கார்டு கேட்டு கடந்த 2015–ம் ஆண்டு கொடுக்கப்பட்டவை ஆகும். அப்போது தாளவாடி தனி தாலுகாவாக அறிவிக்கப்படவில்லை.
எனவே இந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கொடுக்கப்பட்டவை ஆகும். இதில் 6 விண்ணப்ப படிவங்கள் சத்தியமங்கலம் பகுதிக்கு உள்பட்டது. மீதி உள்ள 26 விண்ணப்ப படிவங்கள் தாளவாடி பகுதிக்கு உள்பட்டது.
பரபரப்புஇவைகள் தள்ளுபடி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களா? அல்லது ரேஷன் கார்டு வழங்கப்பட்டதற்கான ஒப்புதல் விண்ணப்ப படிவங்களா? என தெரியவில்லை.
இந்த விண்ணப்ப படிவங்கள் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடியில் உள்ள இந்த பழைய பேப்பர் கடைக்கு எப்படி வந்தது? என விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தார். ரேஷன் கார்டு விண்ணப்ப படிவங்கள் பழைய பேப்பர் கடையில் கிடந்ததால் தாளவாடியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.