டாஸ்மாக் கடையின் பெட்டகத்தை உடைத்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கொள்ளை


டாஸ்மாக் கடையின் பெட்டகத்தை உடைத்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கொள்ளை
x
தினத்தந்தி 16 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஜங்ஷன் பகுதியில் டாஸ்மாக் கடையின் பெட்டகத்தை உடைத்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கொள்ளை போனது. ஆட்டோவில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி,     

திருச்சி ஜங்ஷன் பாரதியார் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே பார் வசதியும் உள்ளது. இந்த பாரின் வழியாக டாஸ்மாக் கடையின் பின்பக்கமாக வரவும் பாதை உள்ளது. இந்த பாதையை டாஸ்மாக் கடை ஊழியர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். கடையின் உள்ளே பணத்தை பத்திரமாக வைப்பதற்காக தரைத்தளத்தில் சிறிய அளவிலான இரும்பு பெட்டகமும், அதனை சுற்றி சிமெண்டால் பூசப்பட்டும். அதன்மேல் பகுதியில் இரும்பு தகடுகளால் மூடப்பட்ட லாக்கர் வசதியும் உள்ளது. தினமும் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடை மூடிய பின் அன்றைய தினம் கடையில் மதுபாட்டில்கள் மூலம் விற்பனையான தொகை அந்த பெட்டகத்தில் வைக்கப்படும். பின்னர் மறுநாள் காலையில் கடையின் மேற்பார்வையாளர் வந்து பணத்தை எடுத்து வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினமும் மது விற்பனை மூலம் கிடைத்த பணத்தை அங்கு வைத்து விட்டு சென்றனர்.

பணம் கொள்ளை

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் பாரில் உணவு பண்டங்கள் தயாரிப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது பாரின் கதவை கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர். மேலும் பாரின் உள்பகுதி வழியாக டாஸ்மாக் கடைக்கு செல்லும் பகுதியில் இருந்த கதவிலும் பூட்டின் அருகே கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து பாரின் உரிமையாளருக்கும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் டாஸ்மாக் கடையின் ஊழியர்களும், பாரின் உரிமையாளரும் விரைந்து வந்தனர். அப்போது டாஸ்மாக் கடையின் உள்ளே சென்று பார்த்த போது பெட்டகம் உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. மேலும் அந்த பெட்டகத்தில் மற்றொரு பகுதியில் வைக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் அப்படியே இருந்தது. அந்த பணம் கொள்ளையர்கள் கையில் சிக்காததால் தப்பியது.

போலீசார் விசாரணை

கடையின் உள்ளே மர்ம நபர்கள் புகுந்து பணத்தை கொள்ளையடித்தது குறித்து கண்டோன்மெண்ட் போலீசாருக்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

மதுபான பாட்டில்கள் எதுவும் திருடு போகவில்லை என கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோவில் தப்பிச்சென்றனர்

கொள்ளை சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையின் அருகே உள்ள ஒரு பிரபல ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு 1.40 மணி அளவில் ஒரு ஆட்டோ பாரின் அருகே நிற்பதும், ஜங்ஷன் பகுதியில் இருந்து டாஸ்மாக் கடை நோக்கி 2 பேர் கையில் பேக்குடன் வருவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஆட்டோவை ஓட்டி வந்தவரும், அந்த 2 பேரும் சேர்ந்து பாரின் உள்ளே நுழைவதும் சிறிது நேரத்திற்கு பின்பு உள்ளே இருந்து 3 பேரும் வெளியே வருவதும், ஆட்டோவில் 3 பேரும் ஏறி ஜங்ஷன் நோக்கி தப்பிச்செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்தும், ஜங்ஷன் ரவுண்டானாவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்தும், ஆட்டோ பதிவு எண் மூலமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த திருச்சி ஜங்ஷன் பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story