இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: வடகாட்டில் கஞ்சி கலயம், விளைபொருட்களுடன் போராட்டம்


இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: வடகாட்டில் கஞ்சி கலயம், விளைபொருட்களுடன் போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, வடகாட்டில் கஞ்சி கலயம், விளைபொருட்களுடன் போராட்டம் நடத்தினர். நல்லாண்டார் கொல்லையில் விவசாயிகள் தூக்கு கயிறு மாட்டி கோஷமிட்டனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி பொதுமக்கள் தொடங்கிய போராட்டம் கடந்த 9-ந்தேதி வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட கோரியும் வடகாடு, நல்லாண்டார் கொல்லையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. வடகாட்டில் நேற்று 11-வது நாளாக போராட்டம் நடந்தது.

வடகாடு சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பலர் மா, பலா, வாழை, நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்களுடன், கையில் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். மேலும் இத்திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டக்களத்தில் கஞ்சி கலயங்களும், கம்பு, சோளம் பயிர்களை படையலாக வைத்தும் கோஷமிட்டனர். மேலும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வடகாட்டில் நேற்று பகல் 12.15 மணி அளவில் திடீரென மழை பெய்தது. மழையிலும் போராட்டம் தொடர்ந்தது. தகரக்கொட்டகையில் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

தூக்கு கயிறு மாட்டி..

இதேபோல நல்லாண்டார்கொல்லையில் நேற்று 28-வது நாளாக போராட்டம் நீடித்தது. பெண்கள் ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு அருகே நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் சிலர் ஆழ்துளை கிணற்றின் மேல் உள்ள இரும்பு குழாயில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு திட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி கட்டியிருந்தனர். 

Next Story