எடப்பாடி பஸ் நிலையத்தில் மது அருந்தும் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை 3 பேர் கைது


எடப்பாடி பஸ் நிலையத்தில் மது அருந்தும் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 March 2017 5:00 AM IST (Updated: 16 March 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பஸ் நிலையத்தில் மது அருந்தும் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

எடப்பாடி,

சேலம் மாவட்டம், எடப்பாடி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 43), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சரவணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவருடைய மனைவி மகாலட்சுமி கணவருடன் வாழ பிடிக்காமல் பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து சரவணன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சரவணன், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த மண்ணாங்கட்டி ஜெயராஜ் ஆகியோர் எடப்பாடி பஸ் நிலையத்திற்குள் உள்ள மதுபானக்கடையில் மது குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆலச்சம்பாளையத்தை சேர்ந்த குண்டு கணேசன் (43), துரையன்(41), வெள்ளர்நாயக்கம்பாளையத்தை சேர்ந்த ஜெராக்ஸ் என்ற பிரபு(25) ஆகியோர் அந்த மதுபானக்கடைக்கு வந்தனர். அவர்கள் சரவணன் மது அருந்தும் தம்ளர் மற்றும் மது பாட்டிலை பிடுங்கி மது குடித்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை


இதனால் கோபமடைந்த சரவணன் அவர்களிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த குண்டு கணேசன், அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து சரவணனின் தலை மற்றும் தோள்பட்டையில் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சரவணனை, அவருடைய நண்பர் ஜெயராஜ் ஆட்டோவில் கொண்டு சென்று எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சரவணனை அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் சரவணன் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து குண்டு கணேசன், துரையன், பிரபு ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சங்ககிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மது அருந்தும் தகராறில் விறகு கட்டையால் அடித்து தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story