வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்திக்கொலை படுக்கை அறையில் பிணம்; திடுக்கிடும் தகவல்கள்


வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்திக்கொலை படுக்கை அறையில் பிணம்; திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 16 March 2017 5:00 AM IST (Updated: 16 March 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டு, படுக்கை அறையில் பிணமாக கிடந்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ஆதித்தன். செங்கல்சூளை தொழிலாளி. இவருடைய மனைவி கில்டா ராணி என்ற ஷாலினி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை கிடையாது.

கில்டா ராணி நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் ஆதித்தன் வீட்டு அருகே உள்ள ஒரு செங்கல்சூளையில் பணியில் ஈடுபட்டார். கில்டா ராணி மட்டும் வீட்டில் தனிமையாக இருந்தார்.

படுகொலை


நேற்று காலை 10.30 மணிக்கு ஆதித்தன் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஆதித்தன் பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் சென்றார். அங்கு படுக்கை அறை கட்டிலில் நிர்வாண நிலையில் கில்டா ராணி பிணமாக கிடந்தார். அவருடைய கழுத்து, கைகளில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயம் இருந்தன.

மனைவி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்ததும் ஆதித்தன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினரிடம் நடந்த விவரத்தை கூறி கதறி அழுதார். இதனை தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு பிணமாக கிடந்த கில்டா ராணியின் உடலை பார்வையிட்டு வீடு முழுவதும் சோதனை செய்தார். மேலும் கில்டா ராணியின் நடத்தை குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணையும் நடத்தினார்.

இதற்கிடையே மோப்பநாய் கொலை நடந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. கில்டா ராணியின் உடலை மோப்பம் பிடித்த நாய் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பரபரப்பு தகவல்


ஆதித்தன் இரவு பணிக்கு சென்று விட்டதால், கில்டாராணி மட்டும் வீட்டில் தனிமையாக இருந்தார். இதனை நோட்டமிட்ட சில மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து கில்டாராணியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியிருக்கலாம். அப்போது அவர் மறுக்கவே, கூர்மையான ஆயுதத்தால் கழுத்து, கைகளில் குத்தி கொன்று விட்டு மர்மநபர்கள் தப்பி ஓடியிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கொலை நடந்த தினம் கில்டா ராணியின் வீட்டு பகுதியில் 3 பேர் சுற்றி வந்ததாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கில்டா ராணியின் கணவர் ஆதித்தனிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்வாண நிலையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

=====

பாக்ஸ்

 
இளம்பெண்ணின் செல்போன் மூலம் விசாரணை


கில்டா ராணியின் உடல் அருகே செல்போன் கிடந்தது. இதனால் செல்போனை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட செல்போன் கில்டா ராணிக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. கடைசியாக கில்டா ராணியின் செல்போனுக்கு யார், யாரெல்லாம் பேசினார்கள் என்ற விவரத்தை போலீசார் சேகரிக்க தொடங்கியுள்ளனர். அதன் மூலம் விசாரணை நடத்தினால், கில்டாராணியை கொன்ற மர்மநபர்கள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
 

Next Story