வங்கி கணக்குகளை வேறு கிளைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்


வங்கி கணக்குகளை வேறு கிளைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் வங்கி கணக்குகளை வேறு கிளைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கியில் முற்றுகை திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இந்த ஊரில்

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் வங்கி கணக்குகளை வேறு கிளைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கியில் முற்றுகை

திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இந்த ஊரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்றுவட்டார பகுதிகளான வடமாவளி, சுள்ளங்குடி, பிராமணம்பட்டி, கருவேல்குறிச்சி, குண்டேந்தல்பட்டி, வைரவன்பட்டி, தானிப்பட்டி, அரளிக்கோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். இந்தநிலையில் வங்கி நிர்வாகம், திருக்கோஷ்டியூர் கிளையில் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளை, அந்த ஊரின் அருகே உள்ள பட்டமங்கலம் வங்கி கிளைக்கு மாற்றம் செய்துள்ளது. இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் சுமார் 200–க்கும் மேற்பட்டோர் நேற்று வங்கியின் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி மேலாளர் மற்றும் திருக்கோஷ்டியூர் போலீசார், முற்றுகையிட்ட வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தையில், வங்கியின் நிர்வாகத்திற்கு வாடிக்கையாளர்களின் கோரிக்கையை அனுப்புவதாகவும், அவர்கள் நேரிடையாக மேல் அதிகாரிகளிடம் முறையிடக்கோரியும் கூறினர். இதனையடுத்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து வாடிக்கையாளர்கள், வங்கி உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

வங்கி மேலாளர் அஜயதாஸ் கூறுகையில், வருகிற 31–ந்தேதி வரை வங்கி கணக்குகள் இந்த வங்கி கிளை அலுவலகத்தில் பராமரிக்கப்படும். பின்னர் வங்கியின் செயல்பாடுகள் உயர் அதிகாரிகளின் உத்தரவை பொருத்தே அமையும் என்றார்.

மாற்றக்கூடாது

வாடிக்கையாளர்கள் கூறும்போது, திருக்கோஷ்டியூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வேறு எதுவும் இல்லாத சூழ்நிலையில், இந்த ஊரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள பட்டமங்கலம் பகுதிக்கு வங்கி கணக்குகளை மாற்றுவது ஏற்புடையது அல்ல. இதனால் வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பு செய்யப்படுவார்கள். மேலும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு 10 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் உள்ளது. எனவே வங்கி கிளையினை மாற்றினால், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டி வரும் என்றனர்.


Next Story