துறைமுக முகத்துவார பகுதியில் தூர்வாரப்படும் மணலை காந்தி சிலையின் பின்புறம் கொட்ட திட்டம்


துறைமுக முகத்துவார பகுதியில் தூர்வாரப்படும் மணலை காந்தி சிலையின் பின்புறம் கொட்ட திட்டம்
x
தினத்தந்தி 16 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

புதுவை துறைமுக முகத்துவார பகுதியில் தூர்வாரப்படும் மணலை காந்தி சிலையின் பின்புறம் கொட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி துறைமுக முகத்துவார பகுதியில் மணல் திட்டுகள் உருவானதால் மீனவர்களால் கடலுக்குமீன்பிடிக்கச் சென்றுவர இயலாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து துறைமுக பகுதியில் மணலை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்த மத்திய அரசு நிறுவனத்தின் சார்பில் தூர்வாரும் கப்பல் ‘கங்கா’ கொண்டுவரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த பணிகள் குறித்து புதுவை துறைமுகத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுவை துறைமுக முகத்துவார பகுதியில் இருந்து தூர்வாரி எடுக்கப்படும் மணலை பழைய துறைமுக பாலத்தில் இருந்து காந்தி சிலையின் பின்பகுதி வரை கொட்டவேண்டும் என்று பணி ஆணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், முகத்துவாரத்தை விரைந்து ஆழப்படுத்த வேண்டியும் கடலில் வாரப்படும் மணலை தற்காலிகமாக 1 கி.மீ. அருகிலேயே கொட்ட பரிந்துரைக்கப்பட்டது. இந்தநிலையில் பல்வேறு தொழில்நுட்ப தடங்கல்களையும் கடந்து கடந்த 13–ந்தேதி முதல் முகத்துவாரம் ஆழப்படுத்தப்பட்டு தற்போது மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

முகத்துவாரம் ஆழப்படுத்தப்பட்டு விட்டதால் பழைய துறைமுக பாலத்துக்கு வடக்கே மணல் கொட்டப்பட உள்ளது. அதற்கான குழாய் அமைக்கும் பணி இப்போது தொடங்கியுள்ளது. ஒரு வாரத்துக்குள் இந்த பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின் புதுச்சேரி கடற்கரையை புனரமைக்கும் விதமாக தூர்வாரப்படும் மணல் பழைய துறைமுக பாலத்தில் இருந்து காந்தி சிலையின் பின்பகுதி வரை கொட்டப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story